599. வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொ லென்று 1கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே.
 

     (இ - ள்.) மாவல் தானை அம்மன்னர் மன்னன் - யானைப் படை குதிரைப்
படைகளால் மிக்க வலிமை பொருந்திய அந்த அரசர்க்கரசனாகிய பயாபதி, வீவு இல் வீங்கு
நீர்வேலி - அழிதலில்லாத கடல்களை வேலியாகவுடைய உலகின்கண், வாழ்பவர்க்கு -
வாழுகின்ற உயிர்கட்கு, அரசர் ஆவி ஆபவர் - மன்னர் உயிர் ஆவர், ஆதலால் - என்று
கூறப்படுதலால், காவல் ஓவும்கொல் - தனது சோர்வினால் தன் கடமையாகிய
காவற்றொழில் ஒழிந்துபடுமோ, என்று - என்று ஐயமுற்று, கண்படான் - உறங்காது
விழித்திருப்பான், (எ - று.)

     “கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்
     கோணிலை திரிந்திடன் மாரிவறங் கூரும்
     மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
     மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
     தன்னுயிர் என்னும் தகுதிஇன் றாகும்“

என்பது மணிமேகலை.
 

( 27 )