நூல் வந்தவழி
6. விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே.
     (இ - ள்.) விஞ்சைக்கு இறைவன் - மாலி காஞ்சன முதலிய சிறந்த வித்தைகளுக்குத்
தலைவனும், விரைசூழ் முடிவேந்தன் - நறுமணங் கமழும் மாலைசுற்றப்பட்ட
முடியணிகலன் அணிந்த மன்னனும் ஆகிய சுவலனசடி யினுடைய; மங்கை - மகளும்;
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடிப் பாவை - மெல்லிய பஞ்சின்மீதிடுதற்கும் அஞ்சி வருந்துதற்குக் காரணமான சிலம்பு பொருந்திய மெல்லிய அடியையுடையவளும்
கொல்லிப் பாவை போல்பவளும்; பூ ஆர் வஞ்சிக் கொடி போல்பவள் - மலர்கள்நிரம்பிய வஞ்சி என்னும் பூங்கொடி போல்பவளுமாகிய சயம்பவை என்பவள்; காரணமாகவந்த - தலைக்கீடாகத் தோன்றிய; செஞ்சொல் புராணத்து உரையின்வழி - இறைவன்
அருளிச்செய்த 'பிரதமாநுயோகமாபுராணம்' என்னும்செவ்விய சொற்களாலியன்ற
புராணத்திற் கூறப்பட்ட முறைப்படியே; சேறும் - யாம் இந்நூலின்கண்ணும்
கூறிச்செல்வேம், (எ - று.)
      
     விஞ்சை - மாலிகாஞ்சன முதலிய மாயவித்தைகள். விஞ்சை, வித்தியாதரருலகுமாம்.
விஞ்சைக் கிறைவனாகிய சடி என்னும் விரை சூழ் முடிவேந்தன் என விரிப்பினுமாம். விரை
- ஈண்டு மாலைக்கு ஆகுபெயர். மங்கை - ஈண்டுப் பருவப் பெயராகாமல் மகள் என்னும்
முறைப்பெயர்ப் பொருட்டாய் நின்றது. பஞ்சி - பஞ்சு. பஞ்சின்மேலிடற்கும் அஞ்சி
அனுங்குதற்குக் காரணமான அடி என்க. பாவை - கொல்லிப்பாவை; கண்ணுட் பாவையுமாம் வஞ்சிக்கொடி - வஞ்சி என்னுமொரு பூங்கொடி. சொற்புராணம் என்றது அருகக் கடவுள் அருளிச்செய்த பிரதமாநுயோக மாபுராணத்தினை. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற் கூறப்பட்டதாகலின் செஞ்சொற் புராணம் என்றார். எனவே இந்நூற்கு முதனூல் மாபுராணம் என்றாராயிற்று. இனி இந்நூற்குச் சிரேய தீர்த்தங்கரர் புராணமே முதனூல் என்பாருமுளர். சீரேய புராணம் - சீபுராணத்தின்கண்ணது. இதனால் இந்நூல் தோன்றுதற்குரிய முதனூல் உணர்த்தப்பட்டது.

 (6)