இது முதல் ஐந்து செய்யுட்கள்
விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
600. மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலம் புதல்வர் 2தாமுமற்
றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
3சிங்க வேறெனச் செப்பு நீரரே.  

     (இ - ள்.) மங்குல் மாமழை மாரி - விசும்பிற்றோன்றும் கரியமுகில் பெய்யும்
மழையை ஒத்த, வண்கையான் - வள்ளன்மை மிக்க கைகளை யுடைய பயாபதியின்,
பொங்கு காதலம் புதல்வர் தாமும் - மிக்க அன்பிற் குரிய அழகிய புதல்வர்களோ எனில்.
மற்று இங்கண் வேந்தர்க்கு - இவண் உள்ள பகை அரசர்களுக்கு, மான்கள் முன் - மான்
கூட்டத்திற்கு முன்னர் எய்திய, ஏனை சிங்க ஏறு என - அவற்றின் வேறாகிய
அரியேறுகளை ஒப்பாவர் என்று, செப்பும் நீரர்-சொல்லத்தக்க தன்மையினர் ஆவர்,
(எ - று.)

     இதுகாறும் பயாபதி வேந்தன் பண்பைப் பாராட்டிய மரீசி இனி மக்கள் மாண்பினை
விரிக்கின்றான். தந்தையறிவே மகன் அறிவு என்பவாகலின் தந்தையின் பின்னர் மக்களைக்
கூறுதல் முறையே என்க.

     விசயதிவிட்டர்கள், மற்றைய மன்னராகிய மான் கூட்டத்திற்குச் சிங்கவேறென, அவர்
ஆண்மையையே முன்னர்ப் பாராட்டினன், அரசர்க்குச் சிறந்துரிமை யுடையது
தோளாற்றலே ஆகலான் என்க.
 

( 28 )