(இ - ள்.) நங்குலக்கொடி நங்கை - நம்முடைய குலத்தின் கட்டோன்றிய பூங்கொடி போல்வாளாகிய சுயம்பிரபை, செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டனுடைய தெய்வத்தன்மை பொருந்திய மார்பினிடத்தே, பங்கயத்துமேல் பாவை தன்னுடன் - செந்தாமரை மலரின்மேல் வதியும் திருமகளோடு (முன்னரே சேர்ந்துளாளாகலின்), சேர்வதற்கு - சேர்ந்துவதிவதற்கு, இங்கன் - இவ்வுலகத்தே, எவன்கொல் மாதவம் செய்ததே - எத்தகைய பெருந்தவம் நோற்றனளோ! (எ - று.) பெறற் கரிய பேறு தவத்தானன்றிப் பெறலாகா தாகலின் செங்கண் மாலாகிய திவிட்டற்குத் தேவியாக நம் சுயம்பிரபை நல்லான் மிகப் பெரிய தவம் நோற்றாளாதல் வேண்டும் என்றான். உரிமைபற்றி நங்குலக்கொடி என்றான் என்க. |