(இ - ள்.) அங்கு - போதனத்தேயுள்ள, அவன் - திவிட்டனுடைய, நலத்திற்கு - உருவ முதலிய நன்மைகளுக்கு, ஒப்பவள் - பொருந்துபவள், நங்கை - சுயம்பிரபையே ஆவள், இங்கு - இவ்விடத்தே, இவட்கு - சுயம்பிரபைக்கும், வேறு - அத்திவிட்டன் ஒருவனையன்றி வேறு, ஏந்தல் - தகுதியுடையோர், இல் - இல்லை, வெங்கண் யானையாய் - வெவ்விய கண்ணையுடைய யானைப் படைகளை உடைய வேந்தே, இவர் - இவ்விரு வருடைய, பொங்கு புண்ணியம் - மிகுந்த நல்லறம், புணர்த்த ஆறு - இவரைக்கூட்டி வைத்தபடியாம், இது - இங்ஙனம் பொருந்தக் கூட்டியது, வியக்கும் நீரது ஏ - இறும்பூது பயக்கும் நீர்மைத்தே ஆகும், (எ - று.) நங்கை : மகளிரிற் சிறந்தோள். நலம் - காதலர்கட்கு அமையற் பாலவாய உருவம் முதலியன. காதலர்கள் இங்ஙனம் பொருந்துதல் உலகில் அரிய நிகழ்ச்சியாதலால் “இது வியக்கும் நீரது“ என்றான். இவட்கும் என்றதில் உள்ள உம்மை விகாரத்தாற் றொக்கது. திவிட்ட நம்பியும் சுயம்பிரபை நல்லாளும் தமக்குள் ஒப்பாதலன்றி வேறு ஒப்பில்லா உயர்வுடையோர் என்றபடி. |