(இ - ள்.) என்று கூறலும் - என்று தூதனாகிய மரீசி சொன்னானாக, ஏந்து நீண்முடி - தரித்த நீண்ட முடியையுடையவனும், வென்றி நிள்புகழ் - சிறந்த வெற்றியையும் விரிந்த புகழையுமுடையவனும், வேக யானையான் - சினமிக்க யானைகளை உடையவனும் ஆகிய சடியரசன், அன்று மற்று அவற்கு அருளி - அப்பொழுது அம்மரீசிக்கு அருள்சுரந்து, நின்று மின் சுடர் நிதியின் நீத்தமே ஈந்தனன் - நிலைத்து நின்று ஒளிகாலும் மணிபொன் முதலிய பொருள் வெள்ளத்தை வழங்கினான், (எ - று.) இவ்வாறு மரீசி கூறக்கேட்ட சடிமன்னன் அளவிறந்த மகிழ்ச்சியுடை யனாய்த் தூதனாகிய மரீசிக்கு அளவிறந்த நிதிகளைப் பரிசிலாக ஈந்தான் என்க. |