அமைச்சரின் விடை
607. செங்க ணீண்முடிச் 2செல்வ சென்றொரு
திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய் 3பகத் தெறுவ னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே.
 

      (இ - ள்.) செங்கண் நீண்முடிச்செல்வ - சிவந்த கண்களையும் நீண்ட
முடியையுமுடைய செல்வமிக்க வேந்தே!, ஒரு திங்கள் நாளினுள் - ஒரு திங்கள்
எல்லையினமைந்த ஒருநாளில், திவிட்டன் சென்று - திவிட்டன் என்பான் போய், ஆங்கு
ஒரு சிங்கம் வாய்பகத் தெறுவன் - அவ்விடத்தின் கண் ஒரு சிங்கத்தை வாயைப்பிளந்து
கொல்லுவன்; என்பது - என்னுமொரு வார்த்தை, தங்கு கேள்வியான் தான்முன் சொன்னதே
- நிலைத்த கேள்விச் செல்வத்தையுடைய சதவிந்து என்னும் நிமித்திகன் முன்னரே தன்
அவதி ஞானத்தாலறிந்து கூறியுள்ளதொரு செய்தியாகும், (எ - று.)
அவதி ஞானம் - முக்கால நிகழ்ச்சியையும் அறியும் அறிவு. வாய்பக வென்புழி
செயவெனெச்சத்தைப் பகுத்து எனத்திரித்துக் கொள்க. தம்முள் ஆராய்ந்து தெளிந்து கூறும்
அமைச்சர்கள் அரசே!, ஒரு திங்ள் எல்லையில் திவிட்டன் ஒரு சிங்கம் வாய்பகத் தெறுவன்
என்று சதவிந்து முன்னர்க் கூறினனன்றே (அடுத்த செய்யுளில் முடிவு காண்க).

( 35 )