காமம் பூத்த காரிகையர்

61.

3காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
4தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.

     (இ - ள்.) காமம் தொத்து அலர்ந்தவர் - தம்முள்ளத்தே காமமாகிய பூங்கொத்து
அரும்பற மலரப்பெற்றவர்; ஒத்து கதிர்த்த கற்பினார் - ஒளிமிக்க கற்புடையவர்கள்; தாமத்து
ஒத்து - மாலைகளுக்கு அமைந்து, அலர்ந்து தாழ்ந்து - விளங்கிப்படிந்து; இருண்ட
கூந்தலார் - இருண்டுள்ள கூந்தலையுடையவர்கள்; தூமத்துச் சுடர்ஒளி - கரியபுகையினூடே
ஒளிர்கின்ற தீப்போன்று; துளும்பு - கூந்தலினூடுஒளிவிட்டு விளங்கும்; தோளினார் -
தோள்களையுடையவர். வாமத்தின் மயங்கி - அழகினோடு கலந்து; மைமதர்த்த -
மையுண்டு மதர்க்கும்; வாள்கணார் - வாள்போன்ற கண்ணையுடையவர்கள். (எ - று.)

     இன்பச் செயலிலே இருபாலாரும் மனம் ஒன்றுபட்டுப் பொருந்தாவழி இன்பம்
நிறைவுடையதாக மாட்டாது ஆகலின் “காமத்தொத்து அலர்ந்தவர்“ என்றார். இவ்விரு
செய்யுட்களாலும் அவ்வரசியரின் மாண்பு உரைக்கப்பட்டது. கதிர்த்த - ஒளிவிடுகின்ற -
கற்பிற்கு ஒளி புகழ். தூமம் - ஈண்டுக் கரும்புகை. அது கூந்தற்குவமை. துளும்புதல் - ஒளி
ததும்புதல். மதர்த்த - செருக்கிய.

 (26)