(இ - ள்.) பஞ்சிமேன் மிதிக்கிற் பனிக்கும் தகை - பஞ்சுக் குவியலை மிதித்தாலும் பொறாது நடுங்கும் மெல்லடியராந் தன்மையுடைய, அம்சில் ஓதியர் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர்கள், அம்முலை நாஞ்சிலா - தம் அழகிய முலைகளைக் கலப்பையாகக்கொண்டு, மஞ்சுதோய்வரை மார்பம் - முகில்படியும் மலையை ஒத்த அச்சுவகண்டனுடைய மார்பகத்தை வயலாக வைத்து, மடுத்துஉழ - நன்கு உழுதலாலே, துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் - உறக்கம் ஒழித்து அக்காமத்தொழில் ஒன்றிலேயே மிக்கவன் ஆனான். ஆண்டுப் பயாபதி “காவல் ஓவுங்கொல் என்று கண்படான்“ என்றதை - ஈண்டு அச்சுவகண்டன் துஞ்சலோவும் தொழிலினன் ஆயினான், என்பதனோடு வைத்து ஆராய்க,(எ - று.) மிதிக்கினும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்“ என்றார் திருவள்ளுவரும். அம்முலை நாஞ்சிலா என்றமையால் மார்பாகிய வயல் என்று கூறுக. அச்சுவ கண்டன் கழி காமமுடையனாய் அத்தொழிலிலே மிக்கான் என்க. |