(இ - ள்.) முத்தம் வாள்நகை - முத்துக்களைப்போன்று ஒளியையுடைய பற்களோடு கூடிய; மொய் பவளம் துணி ஒத்தவாய் அமுது - திண்ணிய பவளத்துணுக்கை ஒத்த வாயில் ஊறும் அமுதத்தை உண்ணும் பொருட்டு, ஒண்கடிகைத்திரள் வைத்த வாயினனாய் - ஒளிபொருந்திய அதரங்களாகிய திரட்சியுடைய உண்கலங்களிற் பொருந்தவைத்த வாயை உடையவனாய், மடவார்கள் தம் - அவ்விள மகளிர்களுடைய, சித்தவாரிகளுள் சென்று தங்கினான் - உள்ளமாகிய கடல்களிலே வீழ்ந்து முழுகிக்கிடந்தான், (எ - று.) மகளிர் பலர் என்பது தோன்ற, சித்தவாரிகள் என்றார். கடிகை - கலம். தங்கினான் - அழுந்தினான். அச்சுவகண்டன் மகளிர் அதரத்தே வைத்த வாயினனாய் அவர்தம் மனக்கடலுள் ஆழ்ந்தான் என்க. மகளிர் அவனைக் கரையேற விடாமல் தம் மனப்படியே தம் மின்பத்தே மூழ்கிக் கிடக்கச் செய்தலின் அவர் மனத்தைக் கடல் என்றார். |