இதுமுதல் 9 செய்யுள்கள்,
அச்சுவகண்டன் காமக்களியாட்டம் கூறுவன

613. ஆரந் தங்கிய மார்பனு 3மந்தளிர்க்
4காருங் கொம்பனை யாருங் கலந்துழித்
தாருங் கொங்கைக ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே.
 
 

     (இ - ள்.) ஆரம் தங்கிய மார்பனும் - முத்துமாலை கிடந்து புரளும்
மார்பினையுடைய அச்சுவகண்டனும், அந்தளிர்க்கு ஆரும் கொம்பு அனையாரும் - அழகிய
மாந்தளிரை ஒத்த மேனியுடைய பூங்கொடிபோலும் மடவாரும், கலந்துழி - கலவி
நிகழ்த்தியபொழுது, தாரும் கொங்கைகளும் பொர - அச்சுவகண்டன் மார்பகத்தனவாகிய
மாலைகளும், மகளிர் கொங்கை களும் தம்முள் மோதிப் போர்புரிய, அணிவண்டினம் தாம்
சில - அழகிய அளிக்குலங்கள் சில, வாரம்பட்டு ஆர்த்தவே!, - நியாயம் இழந்து
ஆரவாரம் செய்தன, (எ - று.)

     நியாயம் இழத்தலாவது : வண்டினங்களுக்குரிய மலர்களையும் அவற்றிலுள்ள
தேனையும் இழக்கும்படி அவற்றை இரியச் செய்தல். வாரம் - பக்ஷபாதம். வாரம்
சொன்னான் மனை என்பதனாலிதனை யறிக. இரண்டு பகைவர் பொருதும்போது நொதுமல்
ஆகிய வண்டுகள் உண்டியுறையுள் இழத்தல் நியாய மல்லாமை காண்க. இதன்கண் புணர்ச்சி
கூறப்பட்டது.
 

( 41 )