614. வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ 1ரொண்டுவர் வாயொளித்
தொண்டை 2யங்கனி யின்சுவை யெய்தினான்.
 

      (இ - ள்.) கொம்பனையார்கள் - பூங்கொம்பு போன்ற இளமகளிர்கள்,
வள்ளத்தினுள் - பொற்கிண்ணத்தில், வண்டுதோய் மதுவாக்கிக்கொண்டு -
அளிகள்மொய்க்கும் கள்ளைப்பெய்து நிறைத்துக்கொண்டு வந்து, கொடுப்ப அஃதுண்டு -
கொடுக்க அக்கள்ளை நிறையக்குடித்து, மற்றவர் - மேலும் அவ்விள மகளிர்களின்,
ஒண்துவர்வாய் - ஒள்ளிய பவளவாயின் கண்ணதாகிய, ஒளித்தொண்டையங்கனி இன்சுவை
எய்தினான் - ஒளியை யுடைய தொண்டைக்கனியை ஒத்த அதரங்களின் ஊறலாகிய இனிய
சுவையையும் நுகர்வானாயினான், (எ - று.) கள்ளும் காமமும் இடையறாது நுகர்ந்தான்
என்பதாம். தொண்டைக் கனி - கொவ்வைக் கனி.

( 42 )