(இ - ள்.) தாமம் மென்குழலார் தடம் கண் எனும் - மலர் மாலை சூட்டப்பட்ட மெல்லிய அளகத்தையுடைய காரிகையாரின் கண்கள் என்று கூறப்படுகின்ற, தேம் மயங்கிய செங்கழுநீர் அணி - தேன் பொருந்திய குவளை மலரின்கண் விளங்கும் அழகிய, காமம் என்பதோர் கள்ளது உண்டு-காமம் என்று கூறப்படும் கள்ளைப்பருகி, யாமமும் பகலும் மயர்வெய்தினான் - இரவும் பகலும் மயங்கிக்கிடந்தான், (எ - று.) கள்ளது - என்புழி, அது பகுதிப் பொருளது. அரோ : அசை. கண் களவு கொள்ளும் சிறு நோக்க முதலியனவே காம வின்பத்திற் பெருஞ் சிறப்புடையன ஆகலின் கண் எனும் செங்கழுநீர் அணி காமம் என்றனர். கழிபெருங் காமமாகலின் யாமமும் பகலும் மயர் வெய்தினான் என்றார். மயர் வெய்துதல் - அதன்கண் மயங்கி அழுந்துதல் என்க. |