617. மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட 3வேவிழை வெய்தினான்.  

     (இ - ள்.) மண்கனிந்த முழவின் - மார்ச்சனையமைந்த மத்தள இசையுடனே நிகழும்,
மடந்தையர் கண்கனிந்திடும் நாடகக் காட்சியும் - ஆடன்மகளிர் கண்களில் மெய்ப்பாடாக
வெளிப்பட்டுத் தோன்றும் கூத்தாகிய காட்சியின்பத்தையும், பண்கனிந்த இன்தீங்குரல்
பாடலும் - பாடன் மகளிருடைய பண்முற்றுப் பெற்ற இனிய மிடற்றுப்பாடலின்பத்தையும்,
விண்கனிந்திடவே விழைவெய்தினான் - தேவர்களும் உளம் நெகிழும்படி விரும்பி
நுகர்வானாயினன், (எ - று.)

     காண்போர் கண்ணைக் கனிவிக்கும் நாடகமுமாம். விண் - தேவர்: ஆகுபெயர்.
இவ்வின்பங்கள் தேவர்களையும் உருக்குதலால், விண்கனிந்திட என்றார். இதன்கண்
மகளிரின்பாற்பெறும் காட்சி இன்பமும் செவியின்பமும் கூறப்பட்டன.
 

( 45 )