618. வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்.
 

     (இ - ள்.) வாவியும் - (அச்சுவகண்டன் அம்மகளிர் குழாத்துடனே) தடாகங்களினும்,
மண்டபம் மதுச்சோலையும் - ஊடே மண்டபங்கள் அமைந்த தேன்துளிக்கும்
பூம்பொழிலிடங்களினும், தூவிமஞ்ஞை துதைந்த செய்குன்றமும் - தோகையான்
அழகெய்திய மயில்கள் நெருங்கிய செய்குன்றங்களினும், பாவும் வெண்மணலும் -
பரப்பப்பட்ட வெளிய மணலிடங்களினும், புனல்பட்டமும் - நீர்மிக்க ஓடைமருங்குகளினும்,
மேவும் நீர்மையனாய் - எய்தும் தன்மையுடையவனாய், விளையாடினான் -
விளையாட்டயர்ந்தான், (எ - று.)

     அச்சுவகண்டன் வாவிகளினும் சோலைகளினும் செய்குன்றங்களினும் மணற்
பரப்புகளினும் புனற்பட்டங்களினும் அம்மகளிருடனே மேவிக் காமக் களியாட்டயர்ந்தான
என்க. இங்குக் கூறப்பட்ட இடங்கள் காமவின்பத்திற்குச் சிறந்த இடங்களாம்.
 

( 46 )