(இ - ள்.) மின்னும் செங்கதிர் மண்டிலம் வெய்து - ஒளியால் மின்னுகின்ற செஞ்ஞாயிற்று மண்டிலம் வெப்பமுடைத்து, ஒளிதுன்னும் திங்கள் பனிச்சுடர் தண்ணிது - ஒளியுடைய திங்கள்மண்டிலத்தினது குளிர்ந்த நிலாக்கற்றை தட்பமுடைத்து, என்னும் இத்துணையும் அறியான் - என்று சொல்லும் இவ்வளவுதானும் அறியப்பெறானாய், களித்து - கட்காமங்களிற் களிப்புற்று, அச்சுவகண்டன் அன்னன் ஆயினான் - அச்சுவகண்டன் என்னும் அம்மன்னன் அத்தகையதொரு தன்மையனானான், (எ - று.) கதிர்மண்டிலம் வெய்து திங்கண்மண்டிலம் தண்ணிது என்று அறிதல் மிக எளிது. அதுதானும் அறிய கில்லான் என்புழி அவன் தான் காதலித்த கட்காமங்களையல்லால் உலகில் வேறொன்றனையும் ஒரு சிறிதும் காண்பானல்லன் ஆயினான் என்றபடி. |