பூமகள் அச்சுவகண்டன் ஆட்சியிலிருந்தகலச்
செவ்வி தேர்தல்

621. தோடு மல்கு சுரும்பணி கோதையார்
கோடி மென்றுகிற் 1குய்யத் தடம்படிந்
தாடித் 2தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் 3பார்த்துள ளாயினாள்.
 

     (இ - ள்.) தோடு மல்கு - இதழ்கள் செறிந்தனவும், சுரும்பு அணிய அளிகள்
நிரலாக மொய்ப்பனவும் ஆகிய, கோதையார் - மலர்மாலைகளை அணிந்த மாதர்களின்,
கோடி மென்துகில் - புதிய மெல்லிய ஆடைகளாற் சுற்றப்பட்ட, குய்யத்தடம் -
அல்குலாகிய தடாகத்தில், ஆடி - குடைந்து விளையாடுதலேயன்றி, தன் அணையாமையிற்
- தன்னைக் காதலித்துச் சேர்தல் இன்மையால், பூமகள் - நிலமடந்தை, ஊடல் உற்று -
அச்சுவ கண்டன் பாற் பிணங்கி, இடம் பார்த்து உளாள் - அவனைப் பிரிந்துபோய்
விடுதற்கேற்ற செவ்வியைத் தேர்ந்து அச்செவ்வி அமையுந் துணையும் அவன்பால்
தங்கியிருப்பவளாயினாள், (எ - று.)

     பூமகள் - திருமகள் எனினுமாம். பூமகள் எனப் பொதுவிற் கூறினார் நிலமகள்
திருமள் கலைமகள் மூவரும் அகல்வார் என்பது தோன்ற.

     “செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து
     இல்லாளின் ஊடி விடும்“ (திருக். 1039)

     என்று உழவர்க்கோதியது அரசர்க்கும் ஒக்குமாகலின் நிலமகள் ஊடிப் பிரிதற்கு இடம் பார்த்திருந்தாள் என்க.
 

( 49 )