இதுமுதல் 8 செய்யுள் ஒருதொடர் நிமித்திகன் கூற்று. (இ - ள்.) அறிவின்கடல் தாங்கினான் - அறிவுக்கடலைத் தன்னகத்தே உடையவனும் நீங்கலாப்புகழான் - அழியாத பெரும்புகழ் படைத்தவனும், சதவிந்து என்பான் - சதவிந்து என்னும் பெயரையுடையவனும் ஆகிய, தன் நிமித்திகன் உளன் - தன் அவைக்களத்தே உள்ளவனாகிய நிமித்திகன், வீங்குவெல் கழலாற்கு - மிக்க வெற்றியையுடைய வீரக்கழலணிந்த அச்சுவகண்டனுக்கு ஆங்கு ஓர்நாள் இறை பெற்று - அவ்விடத்தே ஒரு நாளில் அரிதில் ஒரு செவ்விபெற்று, விளம்பினான்- சொல்வானாயினான், (எ - று.) செவ்வி பெறுதல் அரிதென்பது தோன்ற, ஆங்கோர் நாளிறை பெற்று என்றார். அறிவின் கடலன்ன நீங்காப்புகழான் சதவிந்து வெல் கழலாற்கு விளம்பினான் என்க.
|