(இ - ள்.) முகம்நோக்கினான் - (அரிதிற் செவ்விபெற்று) அச்சுவகண்டன் முகத்தை நோக்கலுற்ற சதவிந்து, மன்னகேள் - அரசே என் விண்ணப்பத்தைக் கேட்டருள்க!, வளைமேய்திரை மண்டிலம் தன்னை - சங்குகள் மேய்கின்ற கடலாற் சூழப்பட்ட - உலகத்தை, ஆள்பவர்க்கு ஓதின - ஆளுகின்ற அரசர்களுக்கு என எடுத்துரைக்கப்பட்டன, தங்கணே பன்னின் - அவ்வரசரிடத்தே வைத்து ஆராய்ந்துரைப்பின், ஆறு பகைக்குலமாம் - அவர்கட்கு உட்பகையாவன ஆறாம், அவை முன்னம் வெல்க என்றான் - அவ்வறுவகையாய உட்பகைகளை முன்னர் ஒரு தலையாக வென்றொழித்தல் வேண்டும் என்று கூறினான், (எ - று.) அறுவகைப் பகையாவன : காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மயக்கம் செருக்கு பகை என்பன. இவை தன்னுள்ளத்தே தோன்றித் தன்னையே அழிப்பன என்பான், தங்கணே பன்னின், என்றான். |