628. இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
1டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே.
 

     (இ - ள்.) மகிழ்ச்சியுள் மதி மைந்துறும்போது - தனது மனத்தின்கண் ணிறைந்த
மகிழ்ச்சி காரணமாக அறிவு வலியுறும்பொழுது, இகழ்ச்சியிற் கெடுவார்களை எண்ணுக என
- முற்காலத்து அங்ஙனம் மைந்துற்றதனாலாய சோர்வால் உலகில் கெட்டுப் போனவர்களை
எண்ணிப் பார்த்திடுக என்று, புகழ்ச்சி நூலுள் புகன்றனர் - புகழப்படுகின்ற மெய்ந்நூலில்
சான்றோர் கூறிவைத்துள்ளனர், பூவினுள் - உலகினுள்ளே, திகழ்ச்சி செல் - புகழ் பரவிய,
பொன் மணிமுடி மன்னனே! - பொன்னாலும் மணியாலும் புனைந்த மோலியையுடைய
வேந்தனே!, ( )

     புகழ்ச்சி நூல் - திருக்குறள். அதன்கட் புகன்றதாவது:

     “இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
     மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து“ (539)
    
     என்பது. இச் செய்யுளில் திருக்குறள் ஒன்றினை முழுதாகப் பெய்து அம் மெய்ந்நூலையும் புகழ்ச்சி நூலெனத் தேவர் புகழ்தல் காண்க.
 

( 56 )