(இ - ள்.) செம்பொன் முடி மன்ன - செம்பொன்னாலாகிய முடியை யுடைய வேந்தனே!, நெறியில் நீதிக்கண் நேரிவை - அரசியல் நடத்தும் வழியினும், அவர்க்கோதிய நீதியினும் நேர்மையாய் இவற்றையும், ஒப்பவும் நீ அறிவை - இன்னோரன்ன பிறவற்றையும் நீயே நன்கு அறிந்துள்ளாய், அவைநிற்க - ஆதலின் நினக்கு மிகைபட யான்கூறிய வாசகங்கள் அமைக, நீ அழன்று செறுதியேனும் - மன்னனே நீ என்னை (மிகைபடப் பேசினான் என்று) மனங்கொதித்துச் சீறுவாய் எனினும், ஓர் உறுதி - (உடன்பால் யான் வைத்த அன்புடைமையால்) உனக்கு உறுதி பயப்பதொரு செய்தி, யான் உரைப்பான் உறுகின்றது - யான் கூறும்படி நேர்கின்றது. (எ - று.) இவ்வாறு அரசியலறங்காட்டிய நிமித்திகன் பின்னர்த்தான் கூறப் போவதனைக் கூற எண்ணி, அரசே! நீ செறுதி ஏனும் அமைச்சர்க்குரிய கடனாதல்பற்றி உனக்கு உறுதியாய தொன்றனை யான் கூறத்தொடங்கினேன் என்றான் என்க. தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்றுரைத்தல் நல்லமைச்சர் கடனாதலின் அங்ஙனம் கூறினான் என்க.
|