வேறு
பெருந்தேவியர் இருவரின் பெற்றி
63. தீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
1ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்.
 
     (இ - ள்.) ஓங்குஇரும்கடல் அம்தானைவேந்து - ஓங்கிய பெரிய கடலைப்போலும்
அழகிய படையை உடைய அரசனை; அணங்கு உறுக்கும் - வருத்தப்படுத்தும்; இன்சொல் -
அவ்விரு மங்கையரின் இனிய மொழிகள்; தீங்கரும்பு - இனிய கரும்பில்; அமிழ்தம்ஊட்டு -
தேவர்களுணவாகிய அமிழ்தத்தைத் கலந்து; தேன்அளாய் - தேனையும் விரவி; பிழிந்த
போலும் - பிழிந்தசாற்றைப் போன்றிருக்கும்; அவ்விருதேவியர்களுள்; வீங்குஇரும் குவவுக்
கொங்கை மிகாபதி - மிகப் பெருத்துத் திரண்ட கொங்கை களையுடைய மிகாபதி என்பவள்;
மிக்க தேவி - முதலாவது பட்டத்தரசி யாவாள்; தாங்க அரும் கற்பின் - பிறரால்
தாங்கமாட்டாத கற்புநலத்தை யுடைய; தங்கை சசி என்பாள் - மிகாபதியின் தங்கையாகிய
சசி என்பவள்; சசியோடு ஒப்பாள் - இந்திரன் மனைவியாகிய இந்திராணியோடு
ஒப்புக்கூறத் தக்கவளாவள். (எ - று.)

     அம்மங்கையரின் மொழிகள் இனிய கரும்புக்கு அமிழ்தம் ஊட்டித் தேனையுங் கலந்து
பிழிந்தாற் போன்றவை : அச்சொற்கள் பயாபதி மன்னனை வருத்தப்படுத்தும் அளவிற்குப்
பெருஞ்சிறப்பு வாய்ந்தவை. அம்மங்கையருள் மிகாபதி என்பவள் மூத்தவள்; சசி என்பவள்
இளையவள். ம்ருகாவதி என்பது மிகாபதி என்றும் ஜயவதி சசி என்றும் திரிந்தன. சசி
மூத்தவள் என்றும் மிகாபதி இளையவள் என்றும் ஸ்ரீபுராணம் மாறுபடக் கூறும்.

( 28 )