(இ - ள்.) பூமிமேற் புரிசை மதில் போதனம் நாம நன்னகர் - நிலத்தின்மேல் புரிசையென்னும் உறுப்பினையுடைய மதில்களாற் சூழப்பட்ட போதனம் என்னும், பெயரையுடைய நலம் சிறந்த நகரம் ஒன்று உளதன்றே, ஆளும் நகைமலர்த்தாமம் நீள்முடியான்றன் - அந் நகரின்கண் வீற்றிருந்த ஆட்சி செய்யும் விளக்கமுள்ள மலர்மாலையை அணிந்துள்ள நீண்ட முடிமன்னனாவான் பயாபதியின், புதல்வர்கள் காமவேள் அனையார் உளர் காண்டி ஆல் - மகார்களாவார் உருவநலத்தால் மன்மதனையே ஒப்பர், விசயன் திவிட்டன் என்பார் இருவர் உளராதலை நீ அறிவாயன்றே, (எ - று.) உத்தரசேடி மலைமேலதாகலின் போதனத்தைப் பூமிமேலது என்றான், ஆல் : அசை. பயாபதி மன்னனையும் அவன் மக்களையும் அச்சுவகண்டன் பண்டே அறிந்துளன் என்பது தோன்றக் காண்டியால் என்றான் என்க. |