(இ - ள்.) ஏந்து தோளவருள் - உயர்ந்த தோளுடைய அவ்விருவருள் வைத்து, இளையான் நமக்கு ஆய்ந்த தொல்பகையாகும் என்றே - இளையவனாகிய திவிட்டன் என்பான் ஆராய்ந்தறிந்ததொரு பழம் பகைவன் ஆவான் என்று, உறப்போந்து ஓர் புன்சொல் நிமித்தம் புறப்பட - பொருந்துமாறு வந்து ஒரு புல்லிய சொல்லாகிய நிமித்தம் வெளிப்பட்டதாக, வேந்தயான் மனத்தின் மெலிகேன் - அரசே அஃதறிந்த பின்னர் யான் என் மனத்துள்ளே மிகவும் வருந்தி மெலியா நின்றேன், (எ - று.) திவிட்டன் தொல்பகைவன் என நிமித்தம் புறப்பட்டது தீமையாதலின் புன்சொல் நிமித்தம் என்றான். யான் மனத்தின் மெலிகேன் என்றமையால், அவனால் உனக்கு அழிவு நேரும் என்பதைக் குறிப்பாற் கூறினன். |