(இ - ள்.) வேக மாருதம் வீச - விரைதலையுடைய பெருங்காற்று வீசியடியா நிற்ப, விண்பால் சிறு மேகசாலம் விரிந்து எதிர்செல்லுமோ? - விசும்பின்கண் சிறிய முகிற்கூட்டம் பரந்து அக்காற்றின் எதிராகச் செல்ல வல்லுமோ!, ஏகமாய என்சீற்றம் அஞ்சாது எதிர்ஆக - ஒப்பில்லாத என்னுடைய சினத்திற்கு அஞ்சாமல் எனக்கு எதிராக, மானுடர்தாம் அசைகிற்பவோ! - மனிதர்களோ இயங்கவல்லுநர் ஆவர்! (எ - று.) சூறைக் காற்றை எதிர்த்து முகில் செல்ல வியலாததுபோல் என்னை மானிடர் எதிர்க்க வல்லுநர் அல்லர் என்றான் என்க. |