(இ - ள்.) இந்திரன் குலிசம்கொண்டு பணிக்குமேல் - தேவர்கோமான் தனது குலிசம் என்னும் படையைக் கைக்கொண்டு ஏவுவானாயின், மலையின் மாசிகரங்களும் வீழ்த்திடும் - மலையின்கண்ணுள்ள பெரிய சிகரங்களையும் அக்குலிசம் அரிந்து தள்ளுதல் ஒழியாது, நிலைய வெஞ்சுடர் ஆழி நினைப்பனேல் - நிலைத்த வெவ்விய ஒளியையுடைய என் சக்கரத்தைப் பணிக்க யான் எண்ணுவேனாயின், தொலைவில் வானவர் தோளும் துணிக்குமே - இப்பேதை மானிடர் கிடக்கப் பகைவர்க்குத் தோலாத அமரர்களுடைய வலிமை மிக்க தோள்களையும் வெட்டி வீழ்த்தும், (எ - று.) வானவர் தோளும் துணிக்கு மென்றான் மானிடரைப் பெரிதும் இகழ்தற்கு; இந்திரன் குலிசம் மலைகளின் சிறகுகளை எளிதாகத் துணிப்பது போன்று என் ஆழி பகைவரை எளிதாக அழிப்பது திண்ணம் என்றான் என்க. |