மங்கையர்க்கரசியராகும் மாண்பு

64.

பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலதமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
1தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.
     (இ - ள்.) பொன்மலர் மணிக்கொம்பு அன்ன - பொன் மலர்களையுடைய அழகிய
கொம்பைப்போன்ற; தேம்குழல் மங்கைமார்கள் - மணம்பொருந்திய கூந்தலையுடைய அந்த
இரண்டு மங்கையர்களும்; பூ குழை மகளிர்க்கு எல்லாம் - அழகிய குழையென்னுங்
காதணியையுடைய மாதர்களுக்கெல்லாம்; திலதம் ஆய்திகழ நின்றார் - சிறந்தவர்களாக
விளங்குமாறு அமைந்து நின்றார்கள். வயந்தகாலத்து - வசந்தகாலத்திலே; மாகொழுந்து
அசோகம் என்ற இரண்டுமே - மாந்தளிர் அசோகந்தளிர் என்னும் இரண்டு தளிர்களுமே;
ஆங்கு எழுந்து - தளிர்த்தலைச் செய்து; அவற்றை எல்லாம் - அக்காலத்துத்தோன்றிய பிற
தளிர்களையெல்லாம்; அணிபெற - அழகு செய்விக்க; அலரும் - விளங்கும். (எ - று.)
மாங்கொழுந்து அசோகம் என்று சொல்லப்பெறுகிற இரண்டுமே வசந்த காலத்தில்
தோன்றும் தளிர்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்து விளங்கும்; அதைப்போன்று அந்நாளில்
விளங்கிய மங்கையர்கட்குள் மிகாபதியும் சசியுமே சிறந்து விளங்கினர் என்க. பொன்மலர்
உறுப்புக்கட்கும் அணிகலன் கட்கும், பூங்கொம்பு உடம்புக்கும் உவமை. உயர்ந்த பிரிவில்
தோன்றிய மகளிரின் கூந்தலில் இயற்கைமணம் அமைந்திருக்கும் என்பது
இலக்கணமாதலால் தேங்குழல் என்று கூறப்பட்டது. வயந்தகாலம் - வசந்தமாகிய காலம்.
சித்திரையும் வைகாசியும் ஆகிய இளவேனிற்பருவம். இது பெரும்பொழுது ஆறனுள் ஒன்று.
 

( 29 )