(இ - ள்.) ஆதலால் அதற்கேற்றது அமைச்சர்கள் ஓதியாங்கு உணர்ந்தீக என்று ஒட்டினான் - இருந்தவாற்றால் சதவிந்துவே! எனது தன்மைக்குத்தக ஆராய்ந்து அறிவுடை அமைச்சர்கள் உரைத்தபடி நீ உணர்ந்துகொள்ளக் கடவாய் என்று தடுத்துரைத்தான் (அவன் யாரெனில்), தன்கண் அல்லார் பெயற்கு ஏன்ற ஓர் ஏதம் யாதும் உண்டு எனும் - தன்னிடத்தே பகைவராவார் செய்வதற்கியன்ற தீது ஏதாயினும் உளதாதல் கூடும் என்று எண்ணுகின்ற, எண்ணம் இல்லாதவன் - எண்ணம் ஒரு சிறிதும் இல்லாதவனாகிய செருக்குடைய அச்சுவகண்டன் என்பதாம், (எ - று.) எனவே நீ உன் அறியாமையை நல்லமைச்சர்பால் பயின்று போக்கிக் கொள்ளற்பாலையன்றி உன் நிமித்தம் மெய்யாம் எனக் கருதி அதற்கேற்ப நடத்தற்குரியன் அல்லன் யான் எனப் பெரிதும் நிமித்திகனை இகழ்ந்தான் என்க. மூடர்கட்கு அறிவு கொளுத்த முயலும் அறிஞர்க்கு நிகழும் இழிவுக்கு இந்நிகழ்ச்சி நல்ல எடுத்துக் காட்டாதலறிக. |