அச்சுவகண்டன் அமைச்சர் கூறுதல்
642. அலங்க லாழியி னானது கூறலுங்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடாம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன
ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்.
 
 

     (இ - ள்.) அலங்கல் ஆழியினான் - மலர்மாலை வேய்ந்த சக்கரப் படையை ஏந்தும்
அச்சுவகண்டன், அதுகூறலும் - அங்ஙனம் சொன்னவுடனே, உலங்கொள் தோளவனுக்கு -
கற்போன்ற வலிய தோள்களையுடைய அச்சுவகண்டன் உணர்ச்சிக்கு, உணர்வாயினார் -
பொருந்திய உணர்ச்சியே உடையவர்களும், கலங்குநூல் கருமத்தொழின் மாக்கள்தாம் -
தெளிவின்றிக் கலங்கிக் கிடக்கும் பொய்ந்நூல்களை ஓதி அவைகாட்டும் நெறியில் நின்று
காரியம்செய்ய முற்படுபவரும் பகுத்தறி வற்ற வரும் ஆகிய அமைச்சர்கள், புலங்கொள்
சூழ்ச்சியராகி - தத்தம் புல்லறிவிற்குப் பொருந்திய ஆராய்ச்சியுடையராய், புகன்றனர் -
அரசனை நோக்கிக்கூறத் தொடங்கினார், (எ - று.)

மாக்கள் - பகுத்தறிவற்றவர். வழிமொழிவதல்லது இடித்துரைப்பார் அல்லர் என்பார்,
அவனுக்கு உணர்வாயினார் என்றார். ஆழியினான் கூறலும், கலங்கு நூல் கருமத்
தொழில்மாக்கள் சூழ்ச்சியராகிப் புகன்றனர் என்க.

( 70 )