643. எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே.
 

     (இ - ள்.) எரியும் தீத்திரள் எள்துணைத்து ஆயினும் - பற்றிஎரியும்
நெருப்புப்பிழம்பு (தொடக்கத்தே) சிறிய எள்ளினது அளவிற்றேயாயினும், காந்திக்கனலுமேல்
கரியச்சுட்டிடும் - செவ்விபெற்று அழன்று கொளுத்தத் தொடங்கின் எத்துணைப்பெரிய
பொருளும் கரிந்துதிர்ந்து போமாறு சுட்டொழிக்கும், தெரியில் தொல்பகைதான் சிறிதாயினும்
- அங்ஙனமே ஆராயுமிடத்துப் பழம்பகையானது எத்துணைச் சிறியதாயினும், விரியப்பெற்ற
பின் - பிற காரணங்களைப்பெற்றுப் பெருகிவிடுமாயின், வென்றிடுகிற்கும் - நம்போன்ற
ஆற்றன்மிக்கார்களையும் ஒரோவழி வென்றொழித்தல் கூடும்,
(எ - று.)

     தீச் சிறிது பற்றியவுடன் விரைந்து அவித்துவிடல் வேண்டும்; இல்லையாயின் அது
பெரிதும் வளர்ந்து எத்தகைய பெரும் நகரத்தையும் அழித்துவிடும், அதுபோல, அரசர்கள்
தமக்குப் பகை தோன்றிய பொழுது சிறிய பகையென்று இகழ்ந்து விட்டுவிட்டால் அச்சிறிய
பகைவரே வளர்ச்சி யுற்றுத் தம்மைப் பின்னர் அழித்து விடுதல்கூடும், என்பதாம்.

     “வினைப்பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
     தீயெச்சம் போலத் தெறும்“ (திருக். 674)

என்பது திருக்குறள்.
 

( 71 )