644. முட்கொ ணச்சு மரமுளை யாகவே
யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
வட்கி நீண்டதற் பின் 1மழு வுந்தறு
கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ.
 

      (இ - ள்.) முள்கொள் நச்சுமரம் முளையாகவே - முள்செறிந்துள்ள
நஞ்சுத்தன்மையுடைய மரமானது முளைக்கும் பொழுதே, உட்கி நீக்கின் உகிரினும்
கொல்லலாம் - அதனை அஞ்சி அகற்ற முற்படின் கையின் அமைந்த நகத்தாலேயே
அதனைக் கிள்ளி அழித்தல்கூடும், வட்கி நீண்டதற்பின் - அம்முண்மரம் நீண்டு வைரமுடைத்தாயபொழுது, தறுகண் மழுவும் குடாரமுந் தாம் களைகிற்பவோ! - திண்ணிய மழு குடாரம் முதலிய வலிய கருவிகளும் அதனைக் களைந்தொழிக்க வல்லுநவல்லவாம்,
(எ - று.)

     வட்குதல் - உள்வைரம் செறிதல். உட்குதல் - அஞ்சுதல், மழு குடாரம் என்பன கோடரிகளின் பேதங்கள்.

     “இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
     கைகொல்லும் காழ்த்த விடத்து“ (திருக். 879)

என்றார் திருவள்ளுவர்.

( 72 )