645. சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய 1லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே.
 

     (இ - ள்.) பகைசென்று சென்று அறியலாவ அன்று - பகைத்திறத்தை அடிக்கடி
சென்று நன்கு அறிந்து கோடலும் எளிதன்று, சிறிய என்று இகழார் - ஆதலின்
பகைத்திறந்தெரிவார் பகைசிறி தென்றிகழ்வாரல்லர், அணிமாமலர் வெறியும் வேரியும்
விம்மி விரிந்து தேன் செறியும் தொங்கல் - அழகிய மணமிக்க மலர்களையும்
வெட்டிவேரையும் செறியவைத்துக் கட்டப்பட்ட மையால் நெருக்குற்று விரிந்து
தேன்நிறையும் மாலையை அணிந்த, செம்பொன் முடிமன்னனே - செம்பொன்னாலாய
முடியினை உடைய எம் அரசே, (எ - று.)

     பகைவர் வளர்ச்சியுறும் பொழுது நம்மால் அறியப்படாதபடி வளர்ந்து விடுவர்.
அவர்கள் வளர்வதை ஒற்றர் முதலியோரால் அறிதலும் எளியதன்று, ஆகலின் அச் சிறிய
பகையைத் தோன்றியபொழுதே அழித்து விடுதல் நன்று என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.
ஆவ அன்று : ஒருமை பன்மை மயக்கம்.
 

( 73 )