(இ - ள்.) அஞ்சி நின்று அவர் கூறியபின் - (எம்முரை அச்சுவ கண்டனுக்கு உவப்பை நல்குமோ அன்றிச் சினத்தையேத் தூண்டுமோ என்னும்) அச்சத்தால் நடுங்கிநின்று அவ்வமைச்சர் இங்ஙனம் கூறிமுடித்த பின்னர் அரிமஞ்சு என்பவன் சொல்லும் - அரிமஞ்சு என்னும் பெயருடைய அமைச்சன் கூறுவான், மற்று ஆங்கு அவன் - நிமித்திகனாற் கூறப்பட்ட போதனத்தின்கண்ணுள்ள அத்திவிட்டன் என்பான், தேர்ந்துகண்டு செஞ்செவே பகை ஆமெனில் - யாம் ஆராய்ந்து காணுங்கால் நம் தகுதிக்கேற்ற நேரிய பகைவனே ஆவன் என நமக்குத் தோன்றுமாயின், எஞ்சில் தொல்புகழாய் - குறையாத பழைய புகழையுடைய வேந்தே!, பின்னை எண்ணுவாம் - அதன் பின்னரே அப்பகையைப்பற்றி ஆராய வேண்டியவற்றை ஆராய்வாம், (எ - று.) திவிட்டன் நமக்குப் பகைவன் ஆவான் என்று நிமித்திகன் கூறிய துணையானே யாம் அவனைப் பகைவனென்று முடிவு செய்தல் தகுதியன்று, அத்திவிட்டன் நமக்குப் பகைவனாதலை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே, பகையாயவழி அவனைக் களைய முற்படல் வேண்டும் என்று அரசனுக்கு அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறினான். |