(இ - ள்.) முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய் - பருவமொட்டுக்களாற் புனைந்த மெல்லிதாய செறிவுடைய மலராலாய முடிமாலையை உடைய அரசே!, பகையலாதவரைப் பகை ஆக்கலும் - பகைத்தற்குரிய இகல் முதலிய குணங்கள் இல்லாதவரைப் பகைவராக்கிக் கொள்ளுதலும், நகையில் தீமனத்தாரை நண்பு எண்ணலும் - மகிழ்தலில்லாத தீங்கெண்ணும் மனமுடையவர்களை நட்டற்கு எண்ணுதலும், மிகையின் - மிகையான செயல்கள் ஆதலான், மற்றவை பின்னை வெதுப்பும் - அச் செயல்கள் விளைவின்கண் துன்புறுத்துவனவாம், (எ - று.) நம்பால் பகைக்குணமில்லாத ஏதிலாரை அறியாமையால் பகையென்று கருதி அவரைக் கெடுக்க முயன்றால் அவர்கள் உண்மையான பகைவர்களே ஆகிவிடுவர். அவ்வாறே நண்பரல்லாதவரை நண்பர் என்று கருதி ஒழுகுதலும் கேடுதரும் ஆகலின், பகைவரா நண்பரா என்று ஆராய்ந்து தெளிவதே முதற்கடன் ஆகும் என்று அரிமஞ்சு கூறினன் என்க. |