(இ - ள்.) அறியத்தேறும் திறத்தது எவ்வாறு எனில் - (போதன நகரத்தின்கண் உள்ள) திவிட்டனை அறிந்து தெளியும் வழி எத்தகையதோ எனில் கூறுவாம், திறையிற்கு என்று விடுதும் - நீயிர் எமக்குத் திறைப் பொருள் இறுத்தல் வேண்டும் என நம் தூதர் சிலரை அவர்பால் விடுப்பாம், விட்டால் திறைமுறையில் தந்து - அங்ஙனம் விட்டபொழுது நாம் வேண்டிய திறையையும் நமக்கு அளிக்கு முறையானே அளித்து, முகமன் மொழிந்து - நம் தூதர்க்கும் அவர் வாயிலாய் நமக்கும் உபசார மொழிகளைக் கூறி, எதிர்குறையில் - நம்முன் பணிவுடையராயின், கொற்றவ - வெற்றி வேந்தே!, அங்கு குற்றம் இல்லையே - அவ்விடத்து ஒரு சிறிதும் பகையாகிய குற்றம் இல்லையென அறியற்பாற்று, (எ - று.) திவிட்டன் முதலியோரைப் பகைவரா, அல்லரா, என்பதை அறிய வேண்டுமாயின் யாம் சுரமை நாட்டிற்கு அரசனாகிய அவன்பால் திறை பெற்றுவரத் தூதரை அனுப்புதல் வேண்டும். அத்தூதர்க்கு முகமன் கூறித் திறைப் பொருள் தருவர் எனில் பகைவர் அல்லர் என்று அறிந்து கொள்ளலாம். திறை கொடார் எனில் பகைவர் என்று அறிதல் எளிதேயாகும் என்றான் என்க. |