(இ - ள்.) ஊட்டரக்குண்ட கோலர் - அரக்கு ஊட்டப்பட்ட கோல்களையுடையாரும், ஒண்கோலத்தார் - ஒளி மிக்க அலங்காரத்தினை உடையாரும், ஓட்டு அரும்பொறி ஒற்றிய ஓலையர் - மண்ணோட்டினுட் பொதிந்த அரிய இலச்சினை பொறிக்கப்பட்ட திருவோலையை உடையாரும், நாட்டியம் உணர்வார் - கூத்தியர் வல்லுநரும் ஆகிய, ஒரு நால்வர் - ஒரு நான்கு தூதர்கள், மோட்டெழில் முகில்சூழ் நெறி முன்னினார் - உயரிய வனப்புடைய முகில்கள் பரவிய விசும்பு வழியாக விரைந்தார்கள், (எ - று.) தூதர்கள் பிறர் கண்கவர் தோற்றமுடையராய் இருக்கவேண்டும் என்ப. நாட்டியம், அவிநயங்காட்டி ஆடும் கூத்து. எண்வகை மெய்ப்பாடுகளையும் வேண்டியபொழுது காட்டிப் பேசுதல் இன்றி யமையாதாகலின், தூதர்கள் நாட்டிய முணர்தல் வேண்டும் போலும். இனி விஞ்சையர் கலைவல்லுநர் ஆதலின் நாட்டியம் உணர்வார் என்றனர் எனினுமாம். |