வேறு
தூதர் போதன நகரத்தை எய்துதல்

651. தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
யோதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே.

      (இ - ள்.) தூதுவர் - அவ்வாறு சென்ற தூதர்கள், தீது அறுதென்மலை மாதிரம்
முன்னுபு - தீமைகளில்லாத தென்மலை நின்ற திசை நோக்கிச் சென்று அதனைக் கடந்து,
ஓதினர் ஓதி உலப்பு அற ஓங்கிய - தன் சிறப்புக்களைப் புகழவல்லார் எத்துணைப்
புகழ்ந்தும் முடிதலில்லாது ஓங்கிய புகழ் உடையதும், சூழ்சுடர் சூடிய குளிகை - சுற்றுப்
புறங்களில் ஒளிக்கற்றை களை அணிந்துள்ள உப்பரிகைகளால் விளங்குவதும் ஆகிய,
போதனமா நகர் அன்றே புக்கனர்- போதனமா நகரத்தில் அந்நாளிலேயே புகுந்தனர்,
(எ - று.)

தீதறு தென்மலை என்றது. தன்பால் வாழ்வோருடைய அழுக்கு நீக்கும்
கடவுட்டன்மையுடைய தக்கிண சேடியை என்க.

( 79 )