தூதர்கள் அரண்மனையை அடைதல்
657. வண்டு படக்குவ ளைப்பிணை 1நக்கலர்
2விண்ட மதுப்பரு 3கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
4மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்.

     (இ - ள்.) வண்டுபட - வண்டினம் மொய்த்தலாலே, குவளை - குவளை அரும்பு,
பிணைநக்கு அலர் - பிணிப்பு நெகிழ்ந்து அலர்தலானே, விண்ட - துளித்த, மது - தேனை,
பருகி - உண்டு, களியின் மதர்கொண்ட நடை - அத்தேன் வெறியாலே செருக்குற்ற
நடையினை உடையவாகிய, களியன்னம் - மகிழ்ச்சியுடைய அன்னப்பறவைகள்,
இரைப்பதுஓர் - ஆரவாரித்தற்கிடமான ஒப்பற்ற, மண்டுபுனல் - பெருகுகின்ற நீரையுடைய,
அகழியையுடைய, புரிசைப்பதி - மதில்சூழ்ந்த அரண்மனையை, சார்ந்தார் - எய்தினார்,
(எ - று.)

     பிணை - பிணிப்பு. இதழ்களின் பிணிப்பென்க. நகுதல் - ஈண்டு நெகிழ்தன்
மேனின்றது. அலர்தலான் விண்ட என்க. மதர் - செருக்கு. புனல் - ஈண்டு அகழி
அத்தூதுவர் - அன்னம் ஆரவாரிக்கும் அகழி சூழ்ந்த மதிலையுடைய அரண்மனையை
எய்தினர் என்க.
 

( 85 )