(இ - ள்.) மகளிர் மன்னவன் ஆவி ஆவார் - மிகாபதியும் சசியும் பயாபதி மன்னனுடைய உயிர் ஆவார்கள். இறைமகன் - பயாபதி மன்னன்; அம்மகளிர் தங்கள் இன்உயிர் ஆகிநின்றான் - அப்பெண்களுடைய இனிய உயிராகப் பொருந்தி அமைந்தான்; இவர்கள் தங்கட்கு - இம்மன்னனுக்கும் இவனுடைய மனைவியர்களுக்கும்; இங்கு - இப்படி; ஒருவர் தம்மேல் ஒருவர்க்கு உள்ளம் ஓட - ஒருவர்மேல் ஒருவர்க்கு மனது செல்ல; முன்னவன் - பழைமையுள்ளவனாகிய; அம்மொய்ம்மலர்க் கணையினான் - வலிய மலர்க்கணைகளையுடையவனான அந்தக்காமன்; புணர்த்த ஆறு என்னைகொல் - செய்தவகை எவ்வாறோ? (எ - று.) மன்னனுக்கு அவனுடைய மனைவியர் உயிராக அமைந்து நின்றார்கள். அம்மனைவியர்க்கோ மன்னன் உயிராக அமைந்து நின்றான். இவ்வாறு ஒருவர்க்கொருவர் உயிராக அமைந்து நிற்குமாறு காமதேவன் செய்த சூழ்ச்சி தான் யாதோ என்றார். முன்னவன் உயிர்த்தோற்றங்கட்குக் காரணமாக நிற்பவன். இல்வாழ்வாராகிய ஆடவரும் பெண்டிரும் இவ்வாறு ஒருவர்க்கொருவர் உயிர்போல் அமைந்து நின்று இல்லற நடத்தலே தலையாய அறமாகலின் இவ்வாறு வியந்து கூறினார். |