(இ - ள்.) பொன்னவிர் நீள்கடைகாவலன் போதக என்னலின் - பொன்னொளி சுடரும் நீண்ட வாயிலைக் காக்கும் அவ்வாயிலோன் மீண்டுவந்து, தூதர்களை நோக்கி நீயிர் புகுதுக என்று கூறியவுடன், எய்தி - அத்தூதுவர்கள் அரசன்பாற் சென்று, இலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்தி - விளங்குகின்ற ஒளியையுடைய நீண்ட முடிமன்னனாகிய பயாபதியின் நெடிய கழல்கட்டிய அடிகளை வாழ்த்தி வணங்கி, கைதொழுதனர் மடக்கிய சொல் நவில் ஓலை ஈந்தார் - கைகூப்பித் தொழுது சுருளிடப் பட்ட தூதோலையை அரசன் கையிற் கொடுத்தார், (எ - று.) வாயிலோன் அரசன் உடன்பாட்டை உரைத்தலும் தூதர் அரசன்பால் எய்தி அவன் கழல் வாழ்த்தி ஓலையைத் தொழுது ஈந்தார் என்க. |