(இ - ள்.) வாசகன் மற்றது வாசினை செய்தபின் - ஏடு படிப்போன் அவ்வோலையை அரசன் கேட்ப வாசித்த பின்னர், மாசகல் நீள்முடி மன்னவன் முன்னிவை - குற்றந்தீர்ந்த நீண்ட முடியையுடைய பயாபதி வேந்தன் முன்னர்ப் பின்வருவனவற்றை, தேசு அகம் மூசிய ஆழியன் சீர்த்தமர் - அகத்தின் கண்ணே ஒளிக்கற்றைகள் மொய்த்த சக்கரப் படையையுடைய அச்சுவகண்டனுடைய சிறந்த தூதர்கள், ஓசைகள் ஓலைகொடு ஒப்ப உரைத்தார் - அத்திருவோலையைக் கருத்திற்கொண்டு தம் வாயினாலும் செய்திகள் சில உரைப்பாராயினர், (எ - று.) வாசினை - படித்தல். அவ்வோலை வாசகத்தை ஏடு படிப்போன் அரசனுக்குப் படித்துணர்த்திய பின்னர். அத்தூதர்கள் பின்வருமாறு கூறினர் என்க. ஓசைகள் - மொழிகள். ஓலைகொடு - ஓலைவாசகத்தைக் கருத்திற் கொண்டு அதற்கு ஆக்கமான சில செய்திகளைச் சொன்னார் என்க. |