(இ - ள்.) வெண்கதிர் முத்து அகில்வேழ மருப்பு ஒடு - வெள்ளிய ஒளியையுடைய முத்தும் அகிலும் யானைக்கொம்பும் ஆகிய இவற்றோடு, கண்கவர் சாமரை வெண்மயிரின் கணம் - கண்ணைக் கவர்கின்ற சாமரை செய்தற்கு வேண்டிய வெண்மையான கவரிமாவின் மயிர்க்கற்றையும், தண்கதிர் - வெண்குடையாய்! - குளிர்ந்த திங்கட்குடையையுடைய வேந்தே!, நீ தரல் வேண்டும் - நீ எம்மரசற்குத் திறையாகக் கொடுத்தல் வேண்டும், இது ஒண்சுடர் ஆழியினான் உரை என்றார் - இஃது ஒள்ளிய சுடர் அமைந்த சக்கரமேந்தும் அச்சுவகண்டனுடைய கட்டளையாகும், என்று கூறினார், (எ - று.) ஈண்டுக் கூறப்பட்ட முத்து வேழமருப்பின் அணித்தாய்க் கூறலின் அம்மருப்பில் விளைமுத் தென்னலாம். முத்தும் அகிலும் வேழ மருப்பும் சாமரை வெண்மயிரின் கணமும் ஆகிய இவற்றைத் திறையாகத் தரல் வேண்டும், இஃது எம்மரசன் கட்டளையாம் என்றார் என்க. |