வேறு
பயாபதியின் மனநிலை
666. வேந்தன்மற் றதனைக் கேட்டே 1வேற்றுவ னெறிந்த கல்லைக்
2காந்திய கந்த 3தாகக் கவுட்கொண்ட களிறு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்.
 

      (இ - ள்.) வேந்தன் மற்றதனைக் கேட்டே - பயாபதி மன்னன் அத்தூதுவர்கள்
உரைத்தவற்றைக் கேட்டு, வேற்றுவன் எறிந்த கல்லை - பகைவன் எறிந்த கல்லை,
கந்ததாகக் கவுள் கொண்ட காந்திய களிறுபோல - தான் அதுபோழ்து தறியில்
யாக்கப்பட்டிருத்தலால் அப்பகைவனை மாறு செய்யமாட்டாது அக்கல்லைச் செவ்வி
வருந்துணையும் தன்கவுளில் அடக்கிக் கொண்ட சினமிக்க யானையைப்போன்று, சேந்தவர்
உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கிவைத்து - தன்பாற் பகைமையுடைய அச்சுவ
கண்டனுடைய தூதர் உரைத்தமொழிகளைத் தனது மனத்தினுள் அடக்கிக் கொண்டு,
நாந்தகக்கிழவர் கோமான் - வாள்மறவரின் தலைவனான பயாபதி வேந்தன்,
நயந்தெரிமனத்தனானான் - காலங்கருதி இருத்தல் என்னும் அரசர்க்கோதிய நன்மையை
உணர்ந்து கொண்ட மனத்தை உடையவ னானான், (எ - று.)

சேர்ந்தவர் - பகைவர், பகைவர் எறிந்த கல்லைத் தறியிடைக் கட்டுண்டு களிறு கவுளில்
அடக்கிக் கொள்ளுமாறுபோலே பகைவனாகிய அச்சுவகண்டன் தூதர், உரைத்த
கொடுமொழிகளைத் தன் அகத்தே அடக்கிக் கொண்டான் என்க. “களிறு கவுளடுத்த
எறிகற்போல ஒளித்த துப்பினை“ என்றார் புறத்தினும் (30).
    
     “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம்பார்த்
     துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்“ (குறள் - 487)

என்பது வாயுறை வாழ்த்து.

( 94 )