(இ - ள்.) கருத்தும் மாண்குலனும் தேசும் கல்வியும் வடிவும் - இயற்கையின் அமைந்த மதிநுட்பமும் உயர்ந்த குலநலமும் புகழுடைமையும், கல்வியறிவுடைமையும் உடல்நலனும் ஆகிய இவையனைத்தும், தம்மில் பொருத்தினாற் பழிக்கலாகாப் புலமை மிக்குடையரேனும் - இருவர்க்கமைந் தனவாக அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுக்காணும்பொழுது இதனின் இது இழிந்த தென்று பழிக்கவியலாதபடி அமைந்தனவாகி அவரும் சமனான அறிவுடையர் ஆயபோதும், ஒருத்தனுக்கு ஒருத்தன் கூறக்கேட்டு உற்றுச் செய்து வாழத்திருந்தினான் - இங்ஙனம் தம்முள் சமனாகிய இருவருள் ஒருவன் மற்றொருவனுக்குக் கட்டளையிடும் தலைவனாகவும், ஏனையவன் அக்கட்டளையைக் கேட்டு இணங்கிச் செய்து அவன் கீழ் வாழ்வானாகவும் செய்தமைத்தான், இறைவனேகாண்! - கடவுள் தானே!, செய்வினைக்கிழவன் என்பான் - (இவ்வேற்றுமையைச் செய்வான் கடவுள் அல்லன்) பழவினையே, (எ - று.) கருத்து முதலியன ஒத்த இருவருள் ஒருவர்க்கு மற்றொருவர் அடிமையாக இருக்கும்படி கடவுள்படைத்திரார், அங்ஙனமாதற்குக் காரணம் ஊழே என்று கருதினன் என்க. இறைவனே என்னும் வினா இறைவன் அல்லன் என்னும் பொருள் பயந்து நின்றது. இங்ஙனமாதற்குப் பழவினையே காரணம் என்றவாறு. “தினைத்துணையார் ஆகித்தந் தேசுள் ளடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர் நினைப்பக் கிடந்த தெவனுண்டா மேலை வினைப்பயன் அல்லாற் பிற“ என்றார் நாலடியினும் - (105). |