அந்த ஓலையைப் படித்தல்

669. ஒளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ
ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா
மளியமோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்.
 

     (இ - ள்.) ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு - புகழுடைமையால் சிறந்த
பெரியோன் ஒருவனை அண்மி அவனுக்கு, உவப்பச்செய்து - மகிழ்ச்சியுண்டாகும்படி
அவன் ஏவியவற்றை நன்குசெய்து, ஓர் அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் -
அவன் நம்பாற்காட்டும் ஓர் அருளாலே யாம் இன்புற்று வாழ்வாம் என்னும் பேராசையினுள்
அழுந்துகின்றாம் - அழுந்தாநின்றோம், நாம் இதனைத் தெளியக்கண்டும் - நாம் இதற்குரிய
காரணத்தை நன்கு தெரிந்துவைத்தும், செய்வினைத் திறங்கள் தன்மைகளை
ஆராய்கின்றோமில்லை, அறிவினாற் சாலப்பெரியமேகாண் - நாம் அறிவுடைமையால்
மிகமிகப் பெரியமே போலும், அளியமோ அளியம் - யாம் மிகவும் அளிக்கத்தக்கவர்களே
ஆகின்றோம், (எ - று.)

அறிவினாற் பெரியம் என்றது, இகழ்ச்சி.

     நல்வாழ்க்கையை அளிப்பது நல்வினையை என்று யாம் நன்றாக அறிந்திருந்தும்
அந்நல்வினை முயலாமல் ஒருவனை அடைந்து அவனுவப்ப அடிமை செய்து அவனருளால்
நன்கு வாழ்தும் என்று முயல்வது அறியாமை என்றபடி.

( 97 )