(இ - ள்.) கமழ - மணம்வீச; அகம் - தன்னிடத்திலே; பூத்த - அலர்ந்த; பொற்பு - அழகாகிய; தேந்துணர் பொறுக்கல் ஆற்றா - தேனையுடைய பூங்கொத்தைத் தாங்கமாட்டாது; கற்பகக்கொழுந்தும் - கற்பக மரத்தின் இளந்தளிரையும்; காமவல்லி அம்கொடியும் - காமவல்லி என்னும் அழகிய பூங்கொடியையும்; ஒப்பார் - ஒத்தவர்களான அவ்விரண்டு மங்கையரும்; சொல்பகர்ந்து உலகம் காக்கும் தொழில் - கட்டளைச் சொற்களைக் கூறி உலகத்தைப் பாதுகாக்கும் வேலையை; புறத்து ஒழியவாங்கி - அமைச்சர் முதலாயினாரிடத்திலே நீக்கி; மல்பகர் அகலத்தானை - மல்தொழில் தன்மையை வெளிப்படுத்துகின்ற அகன்ற மார்பையுடையவனான பயாபதி மன்னனை; மனத்து இடை பிணித்துவைத்தார் - உள்ளத்திலே கட்டி வைத்தார்கள். (எ - று.) தம்மிடத்துள்ள வேட்கை மிகுதியால் அரசன் அரசியல் அலுவல்களை அமைச்சரிடம் ஒப்புவித்துத், தம்முடனே எப்பொழுதும் இன்புற்றிருக்கும்படி அம்மங்கையர் மன்னனைத் தம் வழிப்படுத்தி வைத்தனர். மனத்திடைப் பிணித்துவைத்தார் - அரசன் தமது மனக்கருத்தின்படி நடக்குமாறு வழிப்படுத்தி வைத்தார்கள். காமவல்லி...கற்பக தருவிற் படருங்கொடி. ஒரு தேவிக்குக் கற்பகத்தின் கொழுந்தையும் மற்றொருத்திக்குக் காமவல்லியையும் உவமையாகக் கூறியபடியால் பயாபதிக்குக் கற்பகமரம் உவமையாதல் உய்த்துணர்க. |