(இ - ள்.) ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்கோன் - சிங்கங் களுக்கும் அரசாகிய சிங்கத்தை ஒத்த பயாபதி மன்னன், அனையகூறி - தூதரிடத்து அவ்வுரைகளைச் சொல்லி, வாளிவிற்றடக்கை வெம்போர் - அம்புவிடும் விற்படை பிடித்த பெரிய கைகளையுடையவரும். வெவ்விய போரிக்கண் வல்லவரும் ஆகிய, காளைகள் இதனைக் கேட்பில் கனல்பவால் - காளைபோன்றவராகிய என்மக்கள் விசய திவிட்டர்கள் இச்செய்தியைக் கேட்பார்களாயின் வெகுள்வார்கள் ஆதலால், இவரையின்னே மீளுமாறு அமைப்பன் என்று - இத்தூதுவர்களை (அவர்கள் அறியு முன்னரே) இப்பொழுதே திரும்பிச்செல்லுமாறு செய்குவல் என்று நினைத்து, வேண்டுவ விதின் ஈந்தான் - அவர்கள் செல்வதற்கு வேண்டியவற்றை முறைப்படி வழங்கினான், (எ - று.) இளங்கன்று பயம் அறியாதென்ப வாகலின் பின் விளைவு தேறாது மக்கள் வெகுள்வர்; அவரறியாமலே யான் இத்தூதர்பாற் றிறை நல்கி இவரைச் செலுத்துவல் என்று கருதிச் செலுத்தற்பால பொருண் முழுதும் செலுத்தினான் என்க. |