(இ - ள்.) மஞ்சிடை மதர்த்த - முகில் வரவினால் களிப்புற்ற, மஞ்ஞை வான்குழாம் என்ன - மயில்களின் சிறந்த கூட்டம் போல, ஆங்கண் - அவ்விடத்தே, வெஞ்சுடர் விளங்கும் இடை நிலை மாடத்து - வெவ்விய ஒளியால் விளக்கமுற்ற இடைநிலை மாடத்தின்கண், வஞ்சிநுண் மருங்குல் நோவ - வஞ்சிக்கொடி போன்று மெலிந்துள்ள இடை வருந்தும்படியும், மணிநகைக் கலாவம் மின்ன - மணிகளால் ஆகிய சுடர்க்கற்றையுடைய காஞ்சிக்கோவை மிளிரவும், செஞ்சுடர்ச் சிலம்பு பாட - செவ்விய ஒளியை உடைய சிலம்புகள் இசைக்கவும், தேன்திசை பரவ - அளிகள் நான்கு திசைகளினும் இசையெடுத் தேத்தவும், விரவித் தோன்றிச் சேர்ந்தார் - கலந்து காணப்பட்டு வந்து சேர்ந்தனர். (எ - று) அம்மகளிர்கள் மயிலின் கூட்டம் போன்று இடைநிலை மாடத்தே வந்து கூடி, நோவ மின்னப் பாடப் பரவச் சேர்ந்தார் என்க. |