(இ - ள்.) பாடலால் - இசை பாடுதலில், நரம்பின் தெய்வம் - யாழின் அதிதேவதையாகிய மாதங்கி, படிவங் கொண்டனைய நீரார் - உருக்கொண்டு தோன்றியதொத்த தன்மையுடையார், ஆடலால் - கூத்தாடுதலின்' அரம்பை ஒப்பார் - தேவமகளிர்களை ஒப்பாகும் தன்மையுடையார், மாடெலாம் - பக்கமெங்கும், எரிந்து மின்னும் வயிரக் குண்டலத்தோடு அம்பொன் தோடு - சுடர்வீசி மின்னாநின்ற வைரம் என்னும் மணியாற் செய்த குண்டலங்களும் அழகிய பொன்னாலாய தோடுகளும், உலாம் - உலவாநின்ற, துளங்கித் தோன்றும் சுடிகை - மிளிர்ந்து காட்சியளிக்கும் நுதற் சுட்டியையுடைய; வாண் முகத்து நல்லார் அவரில் - ஒளிமுகத்தையுடைய அவ்வாடன் மகளிரில், ஆயிரவரை ஈந்தான் - ஆயிரமகளிரைத் திறையாக நல்கினான், (எ - று.) தோடுலாம் முகம், சடிகைவாண்முகம் எனத் தனித்தனி கூட்டுக. நல்லார் நரம்பின் றெய்வம் படிவங் கொண்டனைய நீரார், அரம்பை, ஒப்பார், ஆயிரவரைப் பயாபதி திறையாக ஈந்தான் என்க. நரம்பின் தெய்வம் என்றது யாழ்த் தெய்வமாகிய மாதங்கியை. |