(இ - ள்.) மங்கையர் இருவர் ஆகி - மனைவியர் இரண்டு பேராகி; மன்னவன் ஒருவன் ஆகி - அவர்கட்குரிய தலைவன்தான் ஒருவனேயாகி; அங்கு அவர் அமர்ந்தது எல்லாம் அமர்ந்து - அத்தன்மையை உடைய அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் தானும் விரும்பி; அருள்பெருகி நின்றான்-அவர்களிடத்திலே சிறந்த அன்பு பெருகி நின்றவனான் பயாபதி மன்னன்; செம்கயல் - சிவந்த கயல்மீன் போன்றன ஆகிய; வாள்கண் - ஒளிபொருந்திய கண்களையுடைய; தெய்வம்மா மகளிர் தோறும் - தெய்வத்தன்மை யுள்ளவர்களாகிய பூமகள் நிலமகள் என்னும் இருவரிடத்தும்; தங்கிய - ஒரே தன்மையாகப் பொருந்துகின்ற; உருவம் தாங்கும் - வடிவத்தைக் கொள்ளுகின்ற; சக்கரன் தகைமை ஆனான் - உருளைப்படையையுடைய திருமாலின் தன்மையுடையவன் ஆனான். (எ-று.) தெய்வமா மகளிர் அறுபதாயிரம் கோபிகைகளுமாம். இச்செய்யுளால் பயாபதி மன்னனுக்கும் திருமாலுக்கும் ஒப்புக் கூறினார். இஃது உவமையணி. திருமால் - பயாபதி. சீதேவி பூதேவி இருவரும் மனைவியர் இருவருக்கும் ஒப்பு. அமர்ந்ததெல்லாம், ஒருமைப்பன்மை மயக்கம். |